சென்னையில் இருந்து முதல் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது: பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு?
சென்னை: 61 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கியது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த 20-ம் தேதி அறிவித்தார். இதன்படி, வரும் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 25ம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையமும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகமும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில், விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், 61 நாட்களுக்கு பிறகு இன்று சென்னையில் இருந்து விமான சேவை தொடங்கியது. முதல் விமானம் சென்னையில் இருந்து காலை 6.40 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டது. முதல் விமானமாக இன்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பயணிகள் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று https://tnepass.tnega.org – பதிவு செய்து இ-பாஸ் பெறலாம். சென்னை வரும் விமான பயணிகள் நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.