சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு – தவிக்கும் வாகன ஓட்டிகள்…
கொரோனா பொது முடக்க தளர்வைத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது. அதே நேரத்தில் திருச்சி – சென்னை சாலையில் சமயபுரம், திருச்சி – தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி, திருச்சி – திண்டுக்கல் சாலையில் பொன்னலம்பலப்பட்டி, திருச்சி – கரூர் சாலையில் திருப்பராயத்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை, உள்ளிட்ட தமிழ்நாடு முழுக்க 20க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது.
இதற்கான திருத்தியமைக்கப்பட்ட கட்டண விபரத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ₹ 5 – 15 வரை உயர்ந்துள்ளது. பேருந்து, சரக்கு வாகனங்களுக்கான கட்டணம், மாதாந்திர கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி – தஞ்சாவூர் சாலை துவாக்குடியில் உள்ள சுங்கச் சாவடியில் காரில் ஒரு முறை கடந்தால் ₹ 65, இருமுறை என்றால் ₹ 95 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருமுறை அல்லது பலமுறைக்கான (மல்டி) வசூல் என்பது பாஸ்டேக் அட்டை பெற்றிருப்போருக்கு மட்டுமே பொருந்துகிறது.
பாஸ்டேக் அட்டை இல்லை என்றால் ஒவ்வொரு சுங்கச்சாவடியைக் கடக்கும் போதும் ₹ 65 கட்டணம் செலுத்த வேண்டும். சென்று திரும்புதலுக்கான இருமுறை கட்டணத்தைச் செலுத்தினால் 24 மணி நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லும் மல்டி என்ட்ரி வசதி நிறுத்தப்பட்டு விட்டது. வாடகை கார் ஓட்டுநர்களான திருச்சியைச் சேர்ந்த செந்தில் , பிச்சை ஆகியோர் பாஸ்டேக் அட்டை பெற்றவர்களும் கூடுதல் கட்டணத்தால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வு, கொரோனாவால் வருவாய் இழப்பு என பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது நேரடியாகவும் மறைமுகமாவும் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பெரும் சுமையாக இருக்கிறது என்றும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளையும் அவற்றின் கட்டணத்தையும் உடனே முறைப்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.