சிகரெட் பிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிகம்..
புகையிலை பாதிப்பு தொடர்பாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: புகை பிடிப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் கடுமையான தாக்குதலுக்கு அல்லது இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். புகை பிடிப்பதால் உதடுகளுடன் விரல்கள், தொடர்பு கொள்கின்றன. இது கையில் இருக்கும் வைரஸ், வாய்க்குள் செல்லும் வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், இது முதன்மையாக நுரையீரலை தாக்குவதால், கடும் தாக்குதல் அல்லது மரணத்துக்கு வழி வகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதேபோல், கொரோனா வைரஸ் தொற்று முதன்மையாக எச்சில் துளிகள் அல்லது மூக்கில் இருந்து வெளியேற்றப்படுவதின்மூலம் எளிதாக பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் , பான் மசாலா உள்ளிட்ட புகையிலை உபயோகித்து, இருமும்போது அல்லது தும்மும்போது வைரஸ் எளிதில் பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், புகையிலை பயன்படுத்துவது காசநோய், சுவாசம் தொடர்பான நோய்களை உண்டாக்கும் அபாயம் கொண்டுள்ளது. புகையில் சுமார் 7000 ரசாயனங்கள் வெளியேறுகிறது. அவற்றில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால், 12 மணி நேரத்திற்குள் ரத்த ஓட்டத்தில் கார்பன்மோனாக்சைட் இயல்புநிலைக்கு திரும்புகிறது. 12 வாரத்திற்குள் ரத்த ஓட்டம் சீராகி, நுரையீரல் செயல்பாடு அதிகரிக்கிறது. 9 மாதங்களில் இருமல், சுவாச பிரச்னை குறைகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர், கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதால் அதை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.