பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது என ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை டுவிட்டர் சமூக வலைதளம் மூலமாக கடந்த 3-ந் தேதி உறுதிப்படுத்தினார். தான் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்தார்.
அண்ணாத்த படப்பிடிப்பை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிட்டு, ஜனவரி மாதம் முதல் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தற்போது ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறார்.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் புதிய கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும், அந்த கட்சிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் தனது கட்சிக்கு ‘பாபா முத்திரை’ சின்னத்தை அவர் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை அமைதிகாக்கும்படி ரசிகர்களுக்கு மக்கள் மன்றம் வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில், மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவர். பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது. சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும்.
மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25-ம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
ரஜினி கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.