சரஸ்வதி நூலகத்தில் புத்தகங்கள் களவாடல்… பல கோடி ரூபாய்-க்கு புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் விற்பனை செய்யப்பட்டதா?

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்த நூலகம் பிற்கால சோழ மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த நாயக்கர், மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயேர் காலங்களில் இந்த நூலகம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இங்கு இயல், இசை, நாடகம், மருத்துவம், கணிதம், வரலாறு, வாழ்வியல், இலக்கியம், வானவியல், ஜோதிடம் போன்ற விலை மதிப்பில்லா புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நூலகங்களில் புத்தகங்கள் தொடர்ந்து களவாடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அரசுடையமையாக்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகியும் இந்த நூலகத்துக்கு என தனியாக நிரந்தர நிர்வாக அலுவலர் இல்லை எனவும் வெறும் 16 ஊழியர்கள் மட்டுமே இங்கு பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கு நூலகராகப் பணியாற்றும் சுதர்சன் மற்றும் சம்ஸ்கிருத பண்டிதர் வீரராகவன் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் பல்வேறு அரிய வகை புத்தகங்களை வெளியில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட தமிழ் ஆகம புத்தகத்தை சுதர்சன் இங்கிருந்து திருடி வெளிநாட்டில் விற்பனை செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சுதர்சன் முனைவர் பட்டம் பெற்றதில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார் கூறுகிறார் சமூக ஆர்வலர் சமத்துவம்.



