சமாதான கொடி காட்டும் சீனா… சண்டை வேண்டாம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..!
இந்தியாவுடன் சண்டையிட விரும்பவில்லை எனக்கூறியுள்ள சீனா, பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில், ஐந்து வாரங்களாக, இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழியத் தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற சீன ராணுவத்துக்கு, நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதல்களில், 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது. இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை. எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.