சச்சின் பைலட் பதவி நீக்கம்… நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் ஆகும் ஆசை மீண்டும் தலைதூக்கியுள்ளதையடுத்து, அந்த மாநில அரசியலில் சில நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் உச்சக்கட்டமாக இரண்டாவது முறையாக நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை.
அவ்வளவுதான். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று எண்ணிய காங்கிரஸ் தலைமை, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியென அனைத்து பதவிகளையும் பறிக்கப்படுவதாக, அதிரடியாக அறிவித்தது.
சச்சின் பைலட்டின் பதவிகள் பறிக்கப்பட்டதும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (ஜூலை 14) மாலை, மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். அப்போது சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறி்த்தும், தமது தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும் ஆளுநரிடம் கெலாட் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இரவு 7:30 மணியளவில் முதல்வரின் இல்லத்தில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தை, தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும், 10 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடு திட்டங்களுக்கு துரிதமாக ஒப்புதல் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.