கோவை “கல்யாண் ஜுவல்லரியில்” 51 பேருக்கு கொரோனா தொற்று.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், வணிக நிறுவனங்கள் இயங்குவதில் அரசு தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடைகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன. எனினும், முகக்கவசம், தனிநபர் இடைவெளி என்று விதிமுறைகளை பின்பற்ற கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் சீல் வைக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில், கோவை காந்திபுரம் கல்யாண் ஜுவல்லரியில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடை ஊழியர்கள், பொதுமக்கள் என 92 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 51 பேருக்கு தொற்று உறுதியானது. இ.எஸ்.ஐ, கொடிசியா, கற்பகம் மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஆஜாக்கிரதையாக செயல்பட்டு கொரோனா தொற்றை பரப்பியதாக, கல்யாண் ஜூவல்லரி நிர்வாகம் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் சுகாதார துறையினர் புகார் அளித்துள்ளனர்.