புகழ்பெற்ற மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பியர் நிறுவனமான கொரோனா தங்கள் உற்பத்தியை ஒரு மாதத்துக்கு நிறுத்தியுள்ளது.
கொரோனா என்ற வார்த்தை இன்று உலகையே அச்சுறுத்தியுள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உலகளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா என்ற பெயரால் மெக்ஸிகோவில் உள்ள ஒரு மதுபான நிறுவனம் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மெக்சிகோ நாட்டு அரசு, அத்தியாவசியமற்ற அனைத்தையும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா பீர் உற்பத்தியும் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளித்தால் தொடர்ந்து இயங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே கொரோனா பீர் பற்றி பல வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன. இதனால், அமெரிக்காவில் கொரோனா பீர் விற்பனை 40 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
மெக்சிகோவில் இதுவரை 1500 பேருக்கு மேல் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
க்ருபோ மாடெல்லோ என்ற மெக்சிகோ நிறுவனம் கொரோனா என்ற பியரைத் தயாரித்து வந்தது. இப்போது கொரோனா வைரஸால் அந்த பியர் குடிப்பதைப் பலரும் நிறுத்தியுள்ளனர். மேலும் அமெரிக்காவில் பெரும் சேதத்தை கொரோனா செய்திருப்பதால் அந்த பெயருள்ள பியரைக் குடிக்க மாட்டோம் என அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு அவசியமில்லாத தொழிற்கூடங்களை ஏப்ரல் மாதம் வரை மூடுவதற்கு மெக்சிகோ அரசு உத்தரவிட்டது. இதனால் கொரோனா பியர் நிறுவனம் தங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் 15,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.