கொரோனா தடுப்பூசியை தேர்தலுக்கு முன் அறிமுகப்படுத்தி மக்களை கவர டிரம்ப் திட்டம்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கு குடியரசுக்கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தி மக்களை கவர டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். தேர்தலில் தனக்கான வாய்ப்பாக தடுப்பூசியை பயன்படுத்தவும் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், மாகாண அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் தயாராக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏ மற்றும் பி என 2 தடுப்பூசிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றை சேமிப்பது, பாதுகாப்பது மற்றும் விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.