ஹாமில்டன்: நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பால் வேலையிழந்த நபருக்கு, லாட்டரியில் ரூ.47 கோடி பரிசு விழுந்தது. இதனால் அவர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும், ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இதனால் பலர் வேலையிழந்துள்ளனர்.
இந்நிலையில், நியூசிலாந்து ஹாமில்டன் நகரை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் வேலையிழந்து தவித்து வந்த நிலையில், அவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் விழுந்துள்ளது. அவர் வேலையில் இருந்த போது, இணைய வழியாக விற்கும் லாட்டரி நிறுவனத்தில், லாட்டரி வாங்கியிருந்தார்.தற்போது நடத்தப்பட்ட குலுக்கலில், அவர் வாங்கிய எண்ணிற்கு 10.3 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47 கோடி) பரிசு விழுந்துள்ளது. இதனால் அவரும் அவரது மனைவியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது அடையாளத்தை வெளியிட விரும்பாத அவர்கள், கிடைத்த பணத்தில் பிறருக்கு உதவ விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.