கென்யாவில் பசியால் அழுத தனது குழந்தைகளை சமாளிக்க கற்களை தண்ணீரில் வேகவைத்து சமைப்பது போல தாய் ஒருவர் நடித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. . குழந்தைகள் தாய் உணவு வழங்குவார் என்ற நம்பிக்கையில் காத்திருந்து பின் அப்படியே உறங்கியுள்ளனர்.
கென்யா
பெனினா பஹட்டி கிட்சோ என்ற பெண் கணவரை இழந்து குழந்தைகளுடன் கென்யாவில் உள்ள போம்பசாவில் வாழ்ந்து வருகிறார். அவர் துணி துவைக்கும் வேலையை செய்து வந்துள்ளார். கரோனா வைரஸ் காரணமாக வீட்டில் வேலை ஆட்களை சேர்க்க யாரும் முன்வராததால் வீட்டு வேலை செய்யும் பலரது நிலைமை மோசமாகியுள்ளது. அப்படி தான் கிட்சோவும் பாதிக்கப்பட்டுள்ளார். கரோனா அச்சத்தால் வேலை இழந்ததோடு குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமலும் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சமைக்க எதுவும் இல்லாத சூழலில் குழந்தைகள் பசியால் தவித்துள்ளனர். கையில் காசும் இல்லாததால் இதைப்பார்த்த கிட்சோ கற்களை தண்ணீரில் வேக வைத்து சமைப்பது போல நடித்துள்ளார். நீண்ட நேரம் உணவுக்காக காத்திருந்த குழந்தைகள் அப்படியே தூங்கியுள்ளனர். அவரின் 8 மாதக் குழந்தை வெகு நேரம் அழுதுள்ளது. இதைப்பார்த்த கிட்சோவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் சமூக வலைதளங்களில் இதுகுறித்து புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதோடு கிட்சோவுக்கு வங்கிக்கணக்கையும் அவர் தொடங்கி கொடுத்துள்ளார். இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவ உடனே மீடியாவும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளது. இந்த செய்தி மீடியாவில் வெளியான சில மணி நேரங்களில் கிட்சோவுக்கு உதவிகள் குவிந்தன.
இப்போது இவர் வசிக்கும் வீட்டில் மின் இணைப்போ, தண்ணீர் வசதியோ இல்லை. கென்யாவைச் சேர்ந்த மக்கள் பலரும் உதவுவது மேஜிக் போல இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மக்கள் தன் துயரத்தை துடைக்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றும் தொடர்ந்து தனக்கு என்ன உதவி வேண்டும் எனக் கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் கிட்சோ கூறியுள்ளார்.
ஆப் மூலம் பணம் அனுப்பும் செயலியில் சிலர் சமீபத்தில் பணம் அனுப்ப முயன்றபோது, நீங்கள் பணம் அனுப்பும் நபரின் கணக்கில் கொடுக்கப்பட்ட அளவு தொகை இருப்பதால் அவரது பேலன்ஸ் பணத்தை செக் செய்ய சொல்லுங்கள் என வந்துள்ளது. பலரும் அந்த மெசேஜை அப்படி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கென்யா மக்கள் மிகவும் அருமையானவர்கள் என புகழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் கிட்சோ போல பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.