குறுவைப் பயிர்கள் சாகுபடி 21 சதவீதம் அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி!
காரிஃப் அல்லது குறுவைப் பருவம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் அக்டோபர் வரையில் வருகிறது. இக்காலத்தில் விவசாயிகள் மழைப்பொழிவுக்கு ஏற்ப நெல் உள்ளிட்ட பயிர்களை விதைக்கின்றனர். சென்ற ஆண்டில் குறுவை சாகுபடிப் பரப்பு போதிய மழை இல்லாததால் மந்தமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் சாகுபடிப் பரப்பு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது. ஜூலை 7ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் மழைப்பொழிவு 338.3 மில்லி மீட்டராக இருந்துள்ளது. வழக்கமாக மழைப்பொழிவு 308.4 மில்லி மீட்டராக இருக்கும். மே 1 முதல் ஜூலை 12 வரையிலான காலத்தில் மட்டும் 10 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின்படி, நாட்டிலுள்ள 123 அணைகளில் தண்ணீர் இருப்பு கடந்தாண்டின் இதே காலத்தில் இந்த தண்ணீர் இருப்பில் 150 சதவீதமாக அதிகரித்துள்ளது. பயிர் விதைப்புப் பரப்பைப் பொறுத்தவரையில், ஜூலை 17 நிலவரப்படி, மொத்தம் 691.86 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 570.86 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறுவை பயிர் சாகுபடி 21.20 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறுவைப் பயிர்களில் நெல் 168.47 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு அளவான 142.06 லட்சம் ஹெக்டேரை விட 18.59 சதவீதம் அதிகமாகும். நெல்லைத் தொடர்ந்து 81.66 லட்சம் ஹெக்டேரில் பருப்பு வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விதைப்புப் பரப்பு 61.70 லட்சம் ஹெக்டேர் ஆகும். உணவு தானியங்களுக்கான விதைப்புப் பரப்பு 103 லட்சம் ஹெக்டேரில் இருந்து 115.60 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்கள் 154.95 லட்சம் ஹெக்டேருக்கும், கரும்பு 51.29 லட்சம் ஹெக்டேருக்கும், பருத்தி 113.01 லட்சம் ஹெக்டேருக்கும் பயிரிடப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.