கடந்த சில மாதங்களாகவே இந்திய சீன எல்லையில் அத்துமீறல்களும் ஆக்கிரமிப்புகளும் சீன ராணுவப்படைகளால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மீண்டும் இந்திய சீன எல்லையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு புதிய கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் இந்தியா, பூடான், சீனா ஆகிய மூன்று நாடுகளும் எல்லைப்பகுதியைப் பகிர்ந்துகொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது டோக்லாம் மற்றும் பூடான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா 2 கி.மீ தூரமளவிற்கு ஒரு சிறிய கிராமத்தையே அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியான செயற்கைகோள் புகைப்படத்தில் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட வீடுகள், ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்குப் போடப்பட்ட சாலைகள் என செயற்கைக்கோள் படங்களில் தெளிவாகக் காணும்படி அமைந்துள்ளன. அந்த கிராமத்திற்கு பாங்க்டா எனவும் பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய இந்தியாவுக்கான பூடான் தூதர் மேஜர் ஜெனரல் வெட்ஸாப் நாம்கியல், சீனா இதுபோன்ற எந்த கிராமத்தையும் அமைக்கவில்லை என தெரிவித்துள்ளார்