கால்பந்து ஒப்பந்தம் ரத்து!! ‘ஐ-லீக்’- திடீர் முடிவு!!
கோல்கட்டா: ‘ஐ-லீக்’ தொடரில் பங்கேற்கும் ஈஸ்ட் பெங்கால் அணி வீரர்கள் ஒப்பந்தத்தை முன்னதாக ரத்து செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்தியாவின் முன்னணி கால்பந்து தொடர் ‘ஐ-லீக்’. கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் கொரோன வைரஸ் காரணமாக போட்டிகள் நடத்த முடியவில்லை. இதனால் 28 போட்டிகள் மீதம் இருந்த நிலையில் புள்ளிப்பட்டியில் முதலிடத்தில் இருந்த மோகன் பகான் அணி சாம்பியன் ஆனதாக அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள தொடரை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ரத்து செய்தது.இதற்கு ஈஸ்ட் பெங்கால் அணி எதிர்ப்பு தெரிவித்தது.
இதனிடையே பெரும்பாலான அணிகள் வீரர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் வழங்கின. ஆனால் ஏப்., மற்றும் மே மாத சம்பளம் வழங்காது எனத் தெரிகிறது. தவிர தொடர் முடிந்து விட்டதால் ஈஸ்ட் பெங்கால் அணி, தனது வீரர்கள் ஒப்பந்தத்தை வரும் 30ம் தேதியுடன் முடித்துக் கொள்ள அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எதிர்பாராத சூழலில் நிலைமை கையை விட்டுப் போகும் போது, வீரர்கள் ஒப்பந்த விதி சட்டப்படி இப்படிச் செய்ய முடியும் என்பதால் இம்முடிவு எடுத்துள்ளனராம்.அதேபோல மோகன் பகான் அணி, ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கும் கோல்கட்டா அணியுடன் இணைந்தது போல, ஈஸ்ட் பெங்கால் அணியும் வேறொரு அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.