அடுத்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘வாஷ் அவுட்’ ஆகும். காங்கிரசே இல்லாத பாராளுமன்றம் அமையும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு காங்கிரசில் இருந்தபோதே அந்த கட்சியின் செயல்பாடுகளை துணிச்சலுடன் விமர்சித்தவர். இப்போது காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளார்.
பீகாரில் காங்கிரஸ் அடைந்துள்ள தோல்வி மற்றும் மூத்த தலைவரான கபில்சிபல் கட்சியின் செயல்பாடு குறித்து விமர்சித்து இருப்பது பற்றி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-ஒரு அரசியல் கட்சி வெற்றிப்பாதையை நோக்கியே பயணம் செய்யும். ஆனால் காங்கிரஸ் வீழ்ச்சிப் பாதையை நோக்கி தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது.
அரசியல் வாழ்க்கையில் மக்களுக்கு சேவை செய்வதில் மனஉறுதி இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால் அந்த தகுதியை கூட காங்கிரஸ் இழந்து கொண்டிருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்சி கரைந்து காணாமல் போகும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் எச்சரிக்கை மணி அடித்து விட்டார்கள்.
இப்போது கபில்சிபல் உண்மை நிலையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எல்லாம் நன்றாக இருப்பதாக கட்சி தலைமை நினைப்பதாகவும் ஆனால் மக்கள் வலுவான மாற்று சக்தியாக காங்கிரசை நினைக்கவில்லை. சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலம் முடிந்து விட்டதாகவும் கூறி உள்ளார்.
அதுதான் உண்மை. தோல்விக்கான காரணத்தை ஒருபோது காங்கிரஸ் யோசிப்பது கிடையாது. பழியை மற்றவர்கள் மீது போடும். அவர்கள் தோற்றால் பா.ஜனதா மீது குற்றம் சொல்வார்கள். ஆனால் காரணத்தை பற்றி யோசிப்பது கிடையாது. இது ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது.
யாருடைய தயவிலாவது கட்சியை ஓட்டவேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அது எத்தனை நாளைக்கு ஓடும்?
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று மோடி அறிவித்தது மட்டுமல்ல வலிமையான தலைமை பண்பாலும், ஆட்சி நிர்வாகத்தாலும் மக்கள் அவர் பக்கம் இருக்கிறார்கள்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘வாஷ் அவுட்’ ஆகும். காங்கிரசே இல்லாத பாராளுமன்றம் அமையும். எதிர்கட்சியாக வேறு கட்சிகள்தான் இருக்கும்.என்று குஸ்பு அவர்கள் கூறியுள்ளார்.