கள்ளிக்குடி மொத்த விற்பனை சந்தை பெயருக்கு திறப்பு.
இதன்படி கடை ஒதுக்கீடு பெற்ற 52 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடைகளில் முதல் கட்டமாக 104 கடைகள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்றைய தினம் 10 கடைகளைத் திறந்து சிறிது நேரம் விற்பனை செய்தனர். மற்ற கடைகள் இன்று காலை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்வார்கள் மற்ற வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளும் படிப்படியாக திறக்கப்படும் என்று வேளாண் வணிகத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், பேருந்து போக்குவரத்து இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்படவில்லை. எனவே மீண்டும் பயனில்லாத நிலையில் இருக்கின்றன.
திருச்சி மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கள்ளிக்குடியில் 10 ஏக்கர் பரப்பளவில் ₹ 77 கோடி கட்டப்பட்டுள்ள காய்கறி, பழங்கள், மலர்கள் மொத்த விற்பனை சந்தை 2014ம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சர் பழனிச்சாமி திறந்து வைத்தார். ஆனால் திறக்கப்பட்டு 3 ஆண்டுகளாக, வியாபாரிகளின் ஒத்துழைப்பின்மையால் பயன்பாடின்றி இருக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காந்திசந்தை கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. தற்காலிக மொத்த விற்பனை சந்தை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது.