கல்வித் தொலைக்காட்சியில் தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு.!!
தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான சிறப்புக் கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
“பள்ளிக் கல்வித் துறையின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும், பொதுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும், கல்வித் தொலைக்காட்சியை தமிழ்நாடு முதல்வர் கடந்த 6.8.2019 அன்று தொடங்கி வைத்தார்.இத்தொலைக்காட்சியில், எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், படைப்பாற்றலை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு சொல்லும் நிபுணர்களின் பதில்கள், பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள், புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், அரசுப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரையாடல் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்புக் கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பினையும் தமிழ்நாடு முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகளில் கல்வி பயில ஏதுவாக மென் உருவிலான பாடங்களை மடிக்கணினிகளில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வாயிலாகத் தரவிறக்கம் செய்யும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான கல்வி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்ளத் தேவையான ஆலோசனைகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கையை, அவ்வல்லுநர் குழுவின் தலைவரான பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், ஐஏஎஸ், முதல்வரிடம் இன்று சமர்ப்பித்தார்”.
இவ்வாறு தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.