பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் ஆறாவது கட்டுரை இது.
“நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாகவே ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகின்றன. என்னைப் பொறுத்தவரை விஞ்ஞானிகள் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்றல்ல. அறிவியல் அனைவருக்குமானது,”என்கிறார் மாஷா நசீம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த மாஷா நசீம் ஓர் இளம் விஞ்ஞானி; பள்ளிப்பருவத்தில் இருந்து இவர் கண்டுபிடித்த பல கருவிகளுக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்று கூறும் மாஷா, தனது முதல் கருவியை உருவாக்கும்போது அவருக்கு ஒன்பது வயது. குடும்பத்துடன் உணவு விடுதிக்குச் சாப்பிட சென்ற அவர், கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாயைப் பார்த்துள்ளார். அதன்மூலம் அவருக்கு உதயமான ஒரு யோசனைதான் திருடர்களைச் சிக்க வைக்கும் `பக்லர் அலாரம்`.
“என்னுடைய முதல் கண்டுபிடிப்பான பக்லர் அலாரம், எனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் நிகழ்விற்காக நான் வடிவமைத்தது. உணவு விடுதிக்கு சென்ற போது கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாய், ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் செயல்படுகிறது என என் தந்தை சொன்னார்.
அந்த சமயத்தில் திருடர்கள் குறித்த செய்திகளை நான் அதிகம் கேட்டேன். எனவே இந்த ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் நாம் ஏன் ஒரு பக்லர் அலாரம் செய்யக்கூடாது என எனக்குத் தோன்றியது,” என்கிறார் மாஷா நசீம்.