கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறதா? தமிழக முதலமைச்சர் இன்று ஆலோசனை…
தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. மேலும் தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு கடந்த 7-ந்தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட எட்டாம் கட்ட ஊரடங்கு நாளை முடிவுக்கு வருகிறது. மீண்டும் பேருந்து சேவை, ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து. மருத்துவ நிபுணர்களுடன் மதியம் மூன்று மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், அதில் மேலும் தளர்வுகளை அளிப்பது பற்றியும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம், புறநகர் ரயில் சேவையை தொடங்குவது, பள்ளி கல்லூரிகள் திறப்பு மற்றும் கொரோனா இரண்டாம் அலை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.மேலும் இந்த மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.இந்த ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகுதான், தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா? என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும்? என்பது பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.