ஒரு ரத்தப் பரிசோதனையை செய்து 50 வகையான புற்றுநோயை அதுவும் அந்நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்கும் வகையில் விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதுவரை மருத்துவ உலகம் புற்று நோய்க்கான ரத்தமாதிரி என்று எதையும் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனம் தனது புது முயற்சியால் ஒரு ரத்தப் பரிசோதனையை வைத்து ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை நோயின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும் என அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்ட கிரேய்லினால் எனும் மருந்து நிறுவனம்தான் இந்த அரிய கண்டுபிடிப்பை கொண்டு வந்துள்ளது. புற்று நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களிடத்திலும் அவர்களின் ரத்த மாதிரியை வைத்து புற்றநோய்க்கான ஆரம்பக் கட்டம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களும் தொழில் முதலீட்டாளர்களுமான பில்கேட்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் உள்ளிட்டோர் தங்களது முதலீடுகளை செலுத்தி உள்ளனர்.
இந்நிறுவனம் இதுவரை 16,500 பேரிடம் இந்த ரத்தப் பரிசோதனை முறையை சோதித்துப் பார்த்து விட்டதாகவும் கூறி இருக்கிறது. இந்த முறையை இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மையம் அந்நாட்டு மக்களுக்கு பரவலாக அறிமுகப்படுத்தும் நோக்கில் அடுத்த 2024 ஆம் ஆண்டிற்குள் 1 மில்லியன் மக்களுக்குப் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த முறையைப் பயன்படுத்தி புற்றுநோயின் ஆரம்பக் கட்டத்திலேயே ஒருவருக்கு நோய்க்கான அறிகுறிகள் எதாவது இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்களை நோயில் இருந்து காப்பாற்ற முடியும் எனச் சிலர் இந்த கண்டுபிடிப்பு குறித்து மகிழ்ச்சித் தெரிவித்து உள்ளனர். சில ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பரிசோதனை முறை இன்னும் சோதனைக் கட்டத்தில்தான் இருக்கிறது. இன்னும் அதிகமான ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் தேவைப்படும் என விமர்சித்தும் வருகின்றனர்.
ஆனால் இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் புதிய ரத்தப் பரிசோதனை முறையை பொது மக்களுக்கு பரவலாக பயன்படுத்தும் திட்டத்தை இப்போதே கையில் எடுத்து இருக்கிறது. இதனால் அடுத்த 3 வருடத்திற்குள் 50-79 வயது நிரம்பிய 14 ஆயிரம் பேருக்கு முறையாக இந்த ரத்தப் பரிசோதனை முறை மேற்கொள்ளப்படும் எனவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மருத்துவக் கண்டுபிடிப்பில் இதுபோன்ற முயற்சிகள் பல லட்சணக்கான மக்களை இறப்பில் இருந்து காப்பாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இத்தகைய முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.