ஐ.பி.எல் முதல் போட்டியில் விளையாடுமா சி.எஸ்.கே?
கொரோனா காலத்திலும், ஸ்பான்ஷர்ஷிப் ஒப்பந்தம், ஒளிபரப்பு உரிமம் விற்பனை ஆகியவற்றால், ஐபிஎல் தொடரை நடத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், துபாய் சென்ற சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பிவிட்டதால், அவர் தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. ரெய்னா தந்தையின் சகோதரி ஆஷா குடும்பத்தினரை அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில், ரெய்னாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்தார். இதனாலேயே அவர் நாடு திரும்பினார்.
இக்கட்டான சூழலில் உள்ள சென்னை அணி முழுவதுமே 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவருக்கும் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே பயிற்சியை தொடங்க முடியும். கொரோனா உறுதியான வீரர்கள் 2 வாரத்திற்கு தனிமையில் இருக்க வேண்டும். புதிய வீரர்களாக இருந்தாலும், துபாயில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின் தான் அணிக்குள் நுழைய முடியும்.
பலம் பொருந்திய சென்னை, மும்பை அணிகள் முதல் போட்டியில் மோதுவது ஏறக்குறைய உறுதியாக இருந்த நிலையில், போட்டி அட்டவணை வெளியிடுவதை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது.சிக்கல்களில் இருந்து சென்னை அணி மீண்டு வர வேண்டியுள்ளதால், முதல் போட்டியில் சிஎஸ்கே-வின் கர்ஜனையை ரசிகர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.