ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் – தமிழகத்தில் சட்ட மசோதா தாக்கல்
தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதற்கான சட்டமசோதாவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.தமிழக அரசு பிறப்பித்திருக்கக் கூடிய அவசர சட்டத்தின் படி தனிமைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.வாயையும், மூக்கையும் சேர்த்து மூடி முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500 அபராதமும், பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், வணிக வளாகங்கள், பொது இடங்களில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் மற்றும் அவற்றை பின்பற்றாத வாகனம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இன்று தாக்கல் செய்யப்படும் சட்டமுன்வடிவு இன்றே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது.