ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தமிழக முதல்வர் விளக்கம்.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து, 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, நோய் தொற்று குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.பின்னர் பேசுகையில், நாகை மாவட்டத்தில் 1016 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 37 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளதாக கூறினார்.
மேலும், நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளதை குறிப்பிட்ட முதலமைச்சர், கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு தனி மாவட்டமாக இயங்கும் என்றார். அத்துடன், குடி மராமத்து திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் 1200 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், 29-ம் தேதிக்குப் பின்னரே ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என கூறினார்.