உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியிட்ட வருவாய் துறை.
தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அனுமதி அளித்த நிலையில், தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கக் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற பகுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வோர், உடற்பயிற்சி செய்யும்போது, முகத்தை மூடும் வகையிலான திரைகளை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 15 வயதுக்கு கீழ் உள்ளவர்களையும், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களையும் உடற்பயிற்சி கூடங்களில் அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கும் உடற்பயிற்சி கூடம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒருவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களை மற்றவர் பயன்படுத்துவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு உடற்பயிற்சி நிலையங்களில் ஏசி பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் அதன் வெப்பநிலை 24 டிகிரியிலிருந்து 30 டிகிரிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.