டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான முதலிருந்தே வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தார்.
தற்பொழுது கொரோனா அமெரிக்காவைக் கொடூரமாகத் தாக்கியுள்ள நிலையில் அந்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை 2008 சர்வதேச பொருளாதார நெருக்கடியை விடவும் பெரிய அளவிலான தாக்கத்தை எதிர்கொண்டு உள்ளது.
இதன் எதிரொலியாக அமெரிக்காவில் இருக்கும் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்கள் தற்போது செலவுகளைக் குறைக்கும் விதிமாக ஊழியர்களைச் சம்பளமில்லா நீண்ட விடுமுறையைக் கொடுத்துள்ளது.
இன்னும் சில நிறுவனங்கள் நேரடியாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. அப்படி நீண்ட விடுமுறை மற்றும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் அதிகளவில் வெளிநாட்டு ஊழியர்களாக இருக்கிறார்கள். இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பது இந்தியர்கள் தான்.
H-1B விசா
H-1B விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாடு திரும்ப வேண்டும் என்பது சட்டம். அமெரிக்காவில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் திறன் அடிப்படையில் தற்காலிகமாக H-1B விசாவில் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா தாக்கத்தின் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களை அந்நாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வரும் காரணத்தால் அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் H-1B விசாவில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த 2 லட்சம் பேர் வருகிற ஜூன் மாதத்திற்குள் அந்நாட்டில் பணியாற்றும் உரிமையை இழக்க உள்ளனர் எனக் குடியுரிமை கொள்கை ஆய்வாளர் ஜெர்மி நியூஃபெல்ட் தெரிவித்துள்ளார்.
டெக்னாலஜி துறை
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அரசு கொடுக்கப்படும் H-1B விசாவில் 75 சதவீதம் விசாக்கள் டெக்னாலஜி துறை சார்ந்த மக்களுக்குத் தான் செல்கிறது. இந்நிலையில் தற்போது அதிகளவில் பாதிக்கப்படப் போவதும் டெக் துறை தான்.
உதவிகள்
மேலும் இந்தியாவில் இருந்து சென்று அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும், ஒறு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்து மட்டுமே பணியாற்றும் நிலையில், தற்போது அந்நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் குறைந்தபட்ச சம்பளமும், சில ஊழியர்களுக்குச் சம்பள குறைப்பு அறிவித்து வீட்டில் இருந்து பணியாற்ற உதவி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்தியர்கள் வேலைவாய்ப்பு இழக்காமல் தொடர்ந்து அமெரிக்காவிலேயே இருக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் இது அனைவருக்கும் கிடைத்துள்ளதா என்றால் அதுவும் நிச்சயமில்லை.
தாய்நாடு ஏற்கனவே பலர் 30 முதல் 40 நாட்கள் வரையிலான காலத்திற்கு வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் இருக்கின்றனர். மேலும் கொரோனா தாக்கம் அமெரிக்காவில் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், லாக்டவுன் காலம் இன்னும் முடிவில்லை. இதனால் அடுத்த 30 முதல் 60 நாட்கள் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்வது என்பது எளிதான ஒன்று இல்லை.
இந்தச் சூழ்நிலையில் H-1B விசாவில் பணியாற்றும் சுமார் 2,00,000 வெளிநாட்டினர் அமெரிக்காவை விட்டு தாய்நாட்டிற்குத் திரும்ப நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஜெர்மி நியூஃபெல்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச முடக்கம்
அப்படித் தாய்நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றாலும் தற்போது முடியாது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் வான்வழி, தரைவழி எல்லைகளை மூடியுள்ளது. இதனால் வெளிநாட்டுக்குப் பயணிகள் தாய்நாட்டிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர் H-1B விசா ஊழியர்கள்.மேலும் ஜூன் மாதத்திற்குள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ள 2 லட்சம் பேரில் எத்தனை சதவீதம் இந்தியர்கள் என்பது வெளியிடப்படவில்லை.