இரண்டாவது தலைநகராக மதுரை – அரசின் நிலைப்பாடு என்ன…?
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. சென்னையில் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், மதுரையை 2-வது தலைநகராக உருவாக்குவது தென்மாவட்ட மக்களின் விருப்பமாக உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழகத்தில் 2-ஆம் தலைநகரை உருவாக்குவது எம்.ஜி.ஆரின் கனவு என அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 2-ஆம் தலைநகராக மதுரையை அறிவிக்கும் காலம் கனிந்துவருவதாகக் கூறியுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அத்தகைய அறிவிப்பு வந்தால், அது முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் அழியாப் புகழை தரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசுக்கு எந்த யோசனையும் இருப்பதாக தெரியவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மதுரையை 2ம் தலைநகராக அறிவிக்கிறோமோ இல்லையோ, முக்கிய அலுவலகங்களை பிரித்துக் கொடுக்கலாம் என்று பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையும் உள்ளதால், 2-வது தலைநகருக்கு மதுரையே பொருத்தமான ஊர் என்று எம்.பி. ரவிக்குமார் டிவீட் செய்துள்ளார்.