கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும், தற்போது ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. ஆனால் ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிக்க மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் அவசியம் தேவை. இவை இரண்டும் இருந்தால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று பாடங்களை கவனிக்க முடியும்.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள பங்கத்தி என்ற கிராமத்தில் உள்ள பள்ளியிலும் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் முடிவு செய்தனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பெரும்பாலானவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை. அதுமட்டுமின்றி அக்கிராமத்தில் சரியான இன்டர்நெட் வசதியும் இல்லை.
இதனை அடுத்து அந்த கிராமத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டன. பள்ளியில் இருந்து கொண்டே ஆசிரியர்கள் மைக் மூலம் காலை 10 மணி முதல் 2 மணி நேரம் பாடங்களை நடத்தினர். அந்த பாடங்களை மாணவர்கள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர் மூலம் கேட்டு படித்து வந்தனர்.
மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் ஏதாவது ஒரு மொபைல் போனிலிருந்து ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த சந்தேகங்களுக்கு மறுநாள் மைக் மூலம் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் இந்த புத்திசாலித்தனமான ஐடியாவால் அந்த கிராமத்து மாணவர்கள் பாடங்களை படித்து வருவதாகவும் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மைக் கட்டி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பாடங்களை நடத்துவது குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.