“இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எல்லா தகுதியும் அவர்கிட்ட இருக்கு,,..” புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய வீரர்!!!..
ஐபிஎல் தொடர் சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் முதல் முறையாக டெல்லி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. அந்த அணியின் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், 2018 முதல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில், அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அலெக்ஸ் கேரே அவரை சிறந்த கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லி அணிக்கு கேப்டன் ஆனது முதல் ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு நல்ல பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவும் ஒருசேர உருவாகியுள்ளதாக தெரிவித்த அலெக்ஸ், இந்திய அணிக்கான வருங்கால கேப்டன் கிடைத்துள்ளதாகவும், அதற்கான எல்லா தகுதியும் ஷ்ரேயாஸ் ஐயரிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாம் நினைப்பதை விட வேகமாக செயல்படும் ஷ்ரேயாஸ் ஐயர், அணி வீரர்களை இணைப்பதில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என ஷ்ரேயாஸிற்கு அலெக்ஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் தான் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில், 40 பந்துகளில் 93 ரன்களை ஷ்ரேயாஸ் ஐயர் குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.