இந்தியாவில் தங்கியுள்ள “சீனர்களை” திரும்ப அழைத்து கொள்ள முடிவு..!
பெய்ஜிங்: இந்தியாவில் தங்கியுள்ள சீனாவை சேர்ந்த மாணவர்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா வந்தவர்களை திரும்ப அழைத்து கொள்ள சீனா முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல், இரு நாட்டு எல்லையில் பதற்றம் உள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக டில்லியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீன இந்தியாவில் சிக்கலில் உள்ளவர்கள், உடனடியாக தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள். சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோர் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு உதவ வெளியுறவு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இந்தியாவில் உள்ள தூதரகம் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.யோகா கற்கவும், புத்த மத வழிபாட்டு தலங்களை பார்வையிட வந்தவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். சீனா திரும்ப விரும்புபவர்கள் மே 27 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான கட்டண செலவுகளை பயணிகளே ஏற்று கொள்ள வேண்டும். சொந்த ஊர் திரும்பியதும் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதித்தவர்கள் அல்லது அதன் அறிகுறி இருப்பவர்கள், 14 நாட்கள் காய்ச்சல் மற்றும் சளி இருப்பவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் 37.3 டிகிரி வெப்பநிலைக்கு மேல் உள்ளவர்களுக்கும் அனுமதி கிடையாது. மருத்துவ வரலாற்றை மறைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சிறப்பு விமானங்கள் எப்போது இயக்கப்படும் என்பது குறித்தும், இந்தியாவில் எத்தனை சீனர்கள் உள்ளனர் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.