உலகின் மருந்து உற்பத்தியில் முக்கிய கேந்திரமாக மாறியுள்ள இந்தியாவிடம் இருந்து, கொரோனா சிகிச்சைக்கான மருந்தைப் பெற அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகள் காத்துக்கிடக்கின்றன.
கண்ணுக்கு புலப்படாத கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வரும் இந்த சூழலில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்ற வாரம் அமெரிக்காவிற்கு நாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுத்து உதவியதை அனைவரும் அறிவோம். இது கொரோனாவை கட்டுப்படுத்த சரியான மருந்து என நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சைக்காக, பெரும்பாலான நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், மருந்து ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக, இந்திய அரசு அறிவித்தவுடன் அமெரிக்கா உட்பட ஏராளமான நாடுகள் பதறிப்போயின. தடை அறிவிப்புக்குப் பின்னர், முன்னேறிய நாடுகளின் தலைவர்களிடம் இருந்து பிரதமர் மோடிக்கு தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், பிரேசில் அதிபர் போல்சனாரோ என பிரதமர் மோடியை அழைத்து பேசிய தலைவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போதைய சூழலில் உலக நாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்படுவதற்கான காரணம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற ஒற்றை மருந்துதான். இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்ளிட்ட மாத்திரைகளுக்காக அமெரிக்கா, ஸ்பெயின் மட்டுமின்றி தெற்காசிய, மேற்காசிய மற்றும் அரபு நாடுகளும் காத்திருக்கின்றன.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 30 சதவீதம் அமெரிக்காவுக்கும், 16 சதவீதம் ஐரோப்பாவுக்கும், 15 சதவீதம் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக இந்தியா மருந்து வர்த்தத்தில் ஈடுபட்டு வருகிறது.உலகெங்கிலும் மருந்து உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக மருந்து உற்பத்தியில் 12 சதவீதம் இந்தியாவின் பங்கு என்பதும், உலகின் 60 சதவீத தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் தயாராகின்றன என்பதும் வியப்பூட்டும் செய்திகள்.
வல்லரசு நாடுகளில் கூட இல்லாத, இந்த உற்பத்தி திறன் இந்தியாவுக்கு ஏற்பட்டது எப்படி?
மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியா அமைய காரணம் யாராக இருக்கும் என்று யோசிக்கத்தால் , அது நம்மில் பிறரும் எதிர் பார்க்காத ஒரு நபர் , அவர்தான் மறைந்த பிரதமர் இந்திராகாந்தி.
அல்லோபதி மருந்துகளில் பெரும்பாலானவை மேற்கத்திய கண்டுபிடிப்புகளாக இருந்ததாலும், அந்த நிறுவனங்கள் மட்டுமே மருந்து விற்பனையில் ஈடுபட்டதாலும் வசதியானவர்களுக்கு மட்டுமே மருந்துகள் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதை, 1970ஆம் ஆண்டு காப்புரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்தார் இந்திரா காந்தி. உலக வல்லரசுகளிடம் இருந்து வந்த அழுத்தங்களையும், மிரட்டல்களையும் புறம் தள்ளி, உணவு மற்றும் மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதற்கான காப்புரிமை இந்தியாவில் செல்லாது என அதிரடியாக அறிவித்தார்.
இந்த சட்டத்தின் பலனைதான் இந்தியா இன்று அறுவடை செய்துகொண்டிருக்கிறது. ஆம்.. அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் பாராசிட்டமல் மாத்திரை, இந்தியாவில் ஒரு ரூபாய்க்கு கிடைப்பதற்கு இந்த சட்டமே காரணம். இந்திரா காந்தியின் துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா உலகின் மருந்தகமாக தற்போது உருவெடுத்து நிற்கிறது.
சோமாலியாவில் தொடங்கி, அமெரிக்கா வரை ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவு எதுவும் ஒரு முக்கிய காரணம். உலக நாடுகளின் இத்தகைய எண்ணம் மருத்துவத்தின் தேவையையும், ராணுவத்தைவிட முக்கியத்துவம் அளிக்க வேண்டிய துறை மக்கள் நலவாழ்வுதான் என்பதையும் உணர்த்தியுள்ளது.