ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் நாளை முதல் இயக்கம்…
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைக்கு மார்ச் 24-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, பேருந்து, ரயில் சேவைகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் மாநிலங்களுக்குள்ளான பேருந்து சேவைக்கு கடந்த மாதம் 7-ம் தேதி தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கொரோனா ஊரடங்கால் பேருந்துகள் இயக்கப்படாத ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களுக்கு இழப்பீடு, சாலை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளை நாளை முதல் இயக்க உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பேருந்துகளை இயக்கும்போது, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவோம் என்று உறுதியளித்துள்ள அவர், சாலை வரியிலிருந்து விலக்கு அளித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.