ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்ட கிராமத்து இளைஞர்கள்…
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரிய வெண்மணி கிராமத்தில், சுமார் 17 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. ஆனால் நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஆக்கிரமித்து பயிரிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அண்மையில், தமிழக அரசால் பெரிய வெண்மணி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு போதிய இடவசதி இல்லை எனக்கூறி, அந்த திட்டம் பக்கத்து ஊரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, ஆக்கிரமிப்பாளர்களிடம் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு அவர்கள் மறுக்கவே, ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு வரை சென்று பெரிய வெண்மணி கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக அந்த நிலத்தை அளவிட்டு, அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதற்காக அதிகாரிகள் நிர்ணயித்த தேதியும் முடிவடைந்த நிலையில், அங்கு பயிரிட்டிருந்த நிலத்தில் கால்நடைகளை மேயவிட்டு, கிராம மக்களே நிலத்தை மீட்டனர்.
அதேசமயம், 30 ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாக கூறும் ஆக்கிரமிப்பாளர்கள், இது தொடர்பாக தாங்கள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும், இளைஞர்கள் சிலர் நெற்பயிர்களை சேதப்படுத்தி விட்டதாக கூறுகின்றனர்.மீட்கப்பட்ட நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெரிய வெண்மணி கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.