அரியவகை நோயால் அவதிப்படும் ஒன்றரை வயது குழந்தை: தாய்ப்பால் கூட கொடுக்க் கூடாது…
தேனி அருகே கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். பெயிண்டிங் வேலை பார்த்து வரும் இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு அக்கா மகள் பிரியங்காவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் பிரியேஷ் ராஜ் என்ற மகன் இருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராபின் ராஜ் என்ற மகன் பிறந்துள்ளார். பிறந்ததில் இருந்தே மூச்சுத் திணறல், காய்ச்சலால் குழந்தை அவதிப்பட்ட நிலையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்காமலேயே வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை Maple Syrup Urine Disease என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமல்லாமல் சாதாரண உணவுகளையும் கொடுக்கக் கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய்ப்பால் உள்ளிட்ட எந்த உணவும் வழங்கக்கூடாது என்பதால், உடல் மெலிந்து, உட்கார கூட முடியாமல் குழந்தை உள்ளது. குழந்தையை காப்பாற்ற வேண்டுமென்றால், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.