அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சிகூடாது: அண்ணா பல்கலைக்கு ஏஐசிடிஇ கடிதம்
கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு தேர்ச்சி வழங்கிய நிலையில், தேர்ச்சியை ஏற்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு தேர்வு நடத்தமுடியாமல் போனது. இதையடுத்து இறுதி ஆண்டு தேர்வுகளை தவிர அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ கடிதம் ஒன்று அனுப்பியிருந்தது. அதில், தேர்வு எழுதாமல், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கக்கூடாது என்றும், மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரம் ரத்து செய்ய நேரிடும் என்றும் தெரிவித்திருந்தது.இது தொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை என தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. தற்போது அந்த கடிதம் வெளியாகியுள்ளது.