அரசு பஸ்களால் கொரோனா வேகமாக பரவும் அபாயம்: விருதுநகர் மாவட்ட மக்கள் அச்சம்!
விருதுநகர்: விருதுநகர் கோட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணளிகளிடம் சமூக இடைவெளி, கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட எதுவும் இல்லாததால் கொரோனா வேகமாக பரவும் அபாயம் உருவாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து மார்ச் 25ம் தேதி முதல் தடை செய்யப்பட்டு, 68 நாட்களுக்கு பிறகு ஜூன் 1 முதல் இயக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், மண்டலங்களுக்குள் 50 சதவீத பஸ்களை 60 சதவீத பயணிகளுடன் சமூக இடைவெளியுடன் அமரும் குறிக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும். ஒவ்வொரு டிரிப் முடிந்ததும் பஸ் முழுவதும் கிருமி நாசி தெளிக்க வேண்டும். இரு பக்க வாசல்களிலும் சானிடைசர் பொருத்திருக்க வேண்டும். பணியாளர்கள் உடல் வெப்பநிலை தினந்தோறும் பணி துவங்கும் முன் பரிசோதனை செய்ய வேண்டும். பணியாளர்கள் முகக்கவசம், கையுறை, அணிந்து பணியாற்ற வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். பணியாளர்களுக்கு சானிடைசர் வழங்க அரசு உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் இரண்டு என 8 டிப்போக்கள் உள்ளன. இவற்றில் 237 டவுன் பஸ்கள், 181 தொலைதூர பஸ்கள் என 418 பஸ்கள் உள்ளன. இவற்றில் 134 டவுன் பஸ்களும், 88 தொலைதூர பஸ்களும் என 222 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த அரசு பஸ்களில் டிரைவர், நடத்துனர்களுக்கு ஜூன் 1ல் இரு மாஸ்க் மற்றும் ஒரு செட் துணி கையுறை வழங்கி உள்ளனர். சானிடைசர் போக்குவரத்து பணியாளர்களுக்கும், பயணிகளுக்கும் வழங்கவில்லை. மதுரை டிப்போக்களில் பயணிகள் அனைவருக்கும் சானிடைசர் டிக்கெட் எடுக்கும் முன்பாக நடத்துனர் மூலம் கைகளில் ஊற்றப்படுகிறது. விருதுநகர் கோட்டத்தில் நிதியில்லாத காரணத்தால் சானிடைசர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை சோதனை அடைப்படையில் 200 நெருங்கி வருகிறது. மாவட்டத்தில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் வருவதால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்களில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி, சானிடைசர் இன்றி பயணிப்பதால் விருதுநகர் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.