அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தப்பட்டது.
திருச்சி: திருச்சி, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் சாப்பிட வந்த பலர் ஏமாற்றமடைந்தனர்.கொரோனா ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் உணவு இல்லாமல் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, திருச்சி மாநகரில், 11 அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்பட்டன. அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் நன்கொடையாளர்கள் நிதி உதவியுடன், அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் வரை, ஆறு லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மூடப்பட்டிருந்த ஓட்டல்கள் திறக்கப்பட்டன. திருச்சியில் உள்ள, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குதல் நேற்று முன்தினத்தோடு நிறுத்தப்பட்டது. நேற்று காலை முதல், மீண்டும் காலையில் இட்லி, மதியம் சாம்பார், தயிர் சாதம் வழக்கமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடந்த, இரண்டு மாதங்களுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் இருந்த கூட்டத்தை, நேற்று காண முடியவில்லை. அதேநேரம் இலவச உணவு கிடைக்கும் என்று சாப்பிட வந்த பலரும், இலவச உணவு நிறுத்தப்பட்டதை தெரிந்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து, மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: மார்ச், 25 முதல், ஜூன், 1 வரை, 11 அம்மா உணவகங்களிலும் தினமும், 1,000 பேர் சாப்பிட்டனர்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டதால், இலவச உணவு நிறுத்தப்படுகிறது. இதனால், கூட்டம் குறைந்து, சாதாரண நாட்களை போல, 200 பேர் மட்டுமே சாப்பிட்டனர். தொடர்ந்து, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.