அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி…
அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் துணை அதிபரும் தேர்வுசெய்யப்பட உள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்-வும், துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்சும் போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்நிலையில், துணை அதிபர் பதவிக்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அச்சமில்லாத போராளியாகவும், நாட்டின் தலைசிறந்த அரசு ஊழியராகவும் கமலா ஹாரிஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார். துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பெருமையளிப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள். தந்தை ஜமைக்காவையும், தாய் இந்தியாவையும் சேர்ந்தவர்கள். மேலும், கலிபோர்னியாவின் அரசு தலைமை வழக்கறிஞராக தேர்வுசெய்யப்பட்ட முதல் கறுப்பின பெண் மற்றும் செனட் சபைக்கு தேர்வுசெய்யப்பட்ட தெற்கு ஆசிய பாரம்பரியத்தைச் சேர்ந்த முதலாவது பெண் என்ற பெருமைகளை ஹாரிஸ் பெற்றுள்ளார். துணை அதிபர் வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கமலாவுக்கு, அடுத்த 2024-ம் ஆண்டு தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.