அன்புமணிக்கு துணைமுதல்வர் பதவி கேட்கிறோமா?
கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. தி.மு.க தலைமையில் ஏற்கெனவே கூட்டணி கட்சிகள் தொடர்ந்து இயங்கிவரும் நிலையில், அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்தும் பணியைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தேர்தல் நெருங்கும் இருகட்சிகளின் தலைமையிலான கூட்டணியிலும் மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பா.ம.க, தே.மு.தி.க கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது கடைசி நேரத்தில்தான் தெரிய வாய்ப்பு உள்ளது.இந்தநிலையில், பாமக அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் தீரன் நியூஸ் 18க்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர், ‘அன்புமணி தலைமையில் பா.ம.க 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது அன்புமணி ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார். அன்புமணி ராமதாஸுக்கு தமிழகத்துக்கு முதல்வராக வருவதற்கு தகுதிகள் இருக்கிறது. அந்த இலக்கை நோக்கித்தான் பா.ம.கவைக் கட்டமைக்கிறோம். வருங்காலத்தில் அதற்கான காலம் வரும். கூட்டணிக் கட்சிகளிடம் அன்புமணி ராமதாஸூக்கு துணை முதல்வர் பதவி கேட்பது குறித்து செயற்குழுவில் முடிவு செய்யப்படும். பா.ம.க தொண்டர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் வகையில் இருக்கவேண்டும். ஆதி திராவிட மக்களுடன் எந்த மனமாட்சியையும் இல்லை. ராமதாஸ் ஒரு கட்சியில் இருக்கும்போது 90 சதவீத வன்னியர்கள் ராமதாஸின் பேச்சைத்தான் கேட்பார்கள். எனவே, கூட்டணிக் கட்சிகள் எங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்’ என்று தெரிவித்தார்.