அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்…?
2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டன. அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்துவது, தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்களை அடையாளம் கண்டு புதிய பொறுப்புகள் அளிப்பது என சமீபத்தில் இரு கட்சிகளிலும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது வெட்ட வெளிச்சமான நிலையில், எதிர்ப்புறம் உள்ள அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது வேறு ஒருவர் முன்னிருத்தப்படுவாரா? என்ற கேள்வியும் இருக்கிறது. கடந்த ஆண்டு இது தொடர்பான கேள்விக்கு கட்சியே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறியிருந்தனர். முதல்வர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிக்காமலேயே அதிமுக களமிறங்கப்போகிறதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ என்றும் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
”எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் கான்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார். இதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுகவின் உள்ளேயே முரண்பாடான கருத்து எழுந்துள்ளது உறுதியாகியுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்து, அமைச்சர் செல்லூர் ராஜுவின் நேற்றைய கருத்துக்கான பதிலடியா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.