விற்றுத்தீர்ந்த வெங்காயம் – கையிருப்பு இல்லாமல் காத்திருப்பு…
வெங்காய விலை தொடர்ந்து அதிகரிப்பு & தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளில் ஒரு கிலோ 45-க்கு என மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சுப்பிரமணியபுரம், கருமண்டபம், கல்லுக்குழி, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட 14 இடங்களில் கூட்டுறவு பண்ணை பசுமை அங்காடிகள் உள்ளன. இவற்றில் மலிவு விலை பெரிய வெங்காயம் ஒரு கிலோ ₹ 45 என நேற்று முதல் விற்பனை தொடங்கியது. ஒரு நபருக்கு ஒரு கிலோ மட்டும் விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும், விற்பனை தொடங்கிய சில மணிநேரத்தில் இருப்பில் இருந்த அனைத்தும் விற்றுத் தீர்ந்து, மொத்தம் 2 டன் நேற்று விற்பனையாகியது.
இந்நிலையில் தற்போது பெரிய வெங்காயம் கையிருப்பு இல்லாததால் பண்ணை பசுமை கடைகளில் மலிவு விலை வெங்காய விற்பனை இல்லை. சில அங்காடிகளில்சின்ன வெங்காயம் கிலோ ₹ 110 -120க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி மாநகரின் தேவைக்கு 20 டன் வேண்டும் என்று கூட்டுறவுத் துறை தலைமை அலுவலகத்தில் கேட்கப்பட்டுள்ளது. இது இன்றைக்குள் திருச்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெங்காயம் வந்தால், பண்ணை பசுமை அங்காடி மட்டுமின்றி ரேசன் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்தார்.