விநாயகர் சிலைகள் அரசு விதித்த தடையால் விற்பனையாகவில்லை – கடலூர் தொழிலாளர்கள் வேதனை
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி அய்யனார் கோவில் தெருவில் வசிக்கும் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்கள் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்து விற்பனை செய்வது வழக்கம். இயற்கையை பாதுகாக்கும் வண்ணம் இங்கு களிமண் மற்றும் காகிதக்கூழ், கிழங்கு மாவு, வெள்ளை மண், நீரில் கரையும் பலவகை வண்ணம் தீட்டி 2 அடி முதல் 15 அடி வரையில் விதவிதமான சிலைகள் செய்யப்படுகின்றன. அந்தச் சிலைகளை ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் வரை விலை கொடுத்து விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாங்கிச் சென்று வழிபடுவர்.
இந்நிலையில், இவ்வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக விநாயகர் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அரசானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைக்க தடை விதித்துள்ளது. அதனால், விநாயகர் சிலை விற்பனை செய்யும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தெரிவித்த விநாயகர் சிலை செய்யும் சதாசிவம், ‘கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300 சிலைகள் விற்பனை செய்து வந்ததாகவும், ஆனால், இந்த வருடம் விநாயகர் சிலை வைக்க தடை விதித்ததால் இதுவரை 50 சிலைகள் மட்டுமே தயார் செய்து உள்ளதாகவும், சிலை வாங்க யாரும் முன் வராததால் கடன் வாங்கி தயார் செய்த சிலைகள் எப்படி விற்பது? கடன்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்றும், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவலையுடன் கூறினார்.