ரஜினியின் அரசியல் பயணம் விஜயதசமி அன்று தொடங்குகிறது…
தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்பு ஒட்டிக்கொண்டே இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலை ஆனால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டுதான் இருக்கிறது. மக்களிடம் எழுச்சி அலை உருவாகும்போது கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்று சில மாதங்களுக்கு முன் தெரிவித்த ரஜினிகாந்த், கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனாலும், ஆதரவாளர்கள் அவரின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் அசைப்போட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த அறிகுறியையும் அறியமுடியவில்லை. இந்நிலையில், கொரோனா தொற்று பூதாகரமாக இருந்ததால், ரஜினியின் வெளிநடமாட்டத்தை முடக்கியது. கொரோனா அச்சத்தால், ரஜினியின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு அவரை பொது விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என்று குடும்பத்தினர் தடைப்போட்டிருந்ததாக தெரிகிறது. எனினும், ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான விஷயங்களில் ரஜினிகாந்த் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கட்சி தொடர்பான கொள்கைகள் அடங்கிய பிரச்சார வீடியோக்கள் தயாராக உள்ளதாகவும், விஜயதசமி அன்று (அக்டோபர் 26) வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் ரஜினியின் ஆதரவாளரான இயக்குநர் பிரவீன் காந்தி, நியூஸ்18க்கு அளித்த பேட்டியில், விஜயதசமி நாளில் கட்சி குறித்து ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “ரஜினிகாந்த் பலமுறை யோசித்து செய்யக்கூடியவர். தெய்வ அருளும், கடின உழைப்பும் சேர்ந்து அவருக்கு இருப்பதால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். பல ஆளுமைகளுடன் ஆலோசித்து, தனது கட்சி கொள்கைகளை ஆயுதபூஜை அன்று வெளியிட உள்ளதாக கேள்விப்படுகிறேன்.அவ்வாறு தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் எனில், கொள்கைகளால் மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து தனித்து தெரிவார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது ஆன்மிக பொற்காலமாக அமையும்” என்றார். ரஜினிகாந்த் அரசியல் பயணம் குறித்து, நீண்டகாலமாக தமிழக அரசியலில் பேசப்பட்டு வந்த நிலையில், ரஜினி ஒருவேளை இந்த தேர்தலில் களம்கண்டால், 2021 தேர்தல் களம் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை.