மொழியை காரணங்காட்டி கடன் தர மறுத்த வங்கி மேலாளர் பணியிடமாற்றம்…
இந்தி தெரியாது என்றால் கடன் இல்லை என ஓய்வுபெற்ற மருத்துவரை திருப்பி அனுப்பிய அரியலூர் வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியன். கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த வங்கியில் மேலாளராக உள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயண் காம்ப்ளே என்பவர், ஆவணங்களை சரிபார்த்த பின்னர், இந்தி தெரியுமா? என ஓய்வுபெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார். அதற்கு தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என பாலசுப்பிரமணியன் கூறிய நிலையில், இந்தி தெரியாவிட்டால் கடன் இல்லை என வங்கி மேலாளர் விஷால் நாராயண் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன், மான நஷ்ட ஈடு கேட்டு வங்கி மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக வங்கி நிர்வாகிகளை நமது செய்தியாளர் தொடர்பு கொண்டபோது, அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில், வங்கி மேலாளரின் செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஓய்வுபெற்ற மருத்துவரிடம் வங்கி அதிகாரி ஆணவத்தை காட்டியிருப்பதாகவும், இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேராபத்து எனக் கூறியுள்ளார். தமிழர் உணர்வுடன் விளையாடினால், சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, மொழியை காரணங்காட்டி ஓய்வுபெற்ற மருத்துவருக்கு கடன் தர மறுத்த மேலாளர் விஷால் நாரயணை, திருச்சி மண்டல அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.