மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம்.!
ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஊரடங்கு காலத்தில் மின் கணக்கீடு செய்யாததால், முந்தைய மாத கட்டணத்தையே செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது.ஊரடங்கு தளர்விற்குப் பின் மொத்த யூனிட்டுகளை கூட்டி கட்டணம் நிர்ணயித்த மின்வாரியம், ஊரடங்கின்போது செலுத்திய தொகையை மட்டும் கழித்தது.
குறிப்பிட்ட யூனிட்டுகளை தாண்டும்போது கட்டணமும் அதற்கேற்ப நிர்ணயம் செய்யப்படும் என்பதால், பெரும்பாலானோருக்கு 500 யூனிட்டுகளை தாண்டி கட்டணம் எகிறியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி பில்லாகவும், மீத யூனிட்டுகளை அடுத்த 2 மாதங்களுக்கான பில்லாகவும் நிர்ணயிக்க வேண்டுமென கோரினார். ஊரடங்கில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாகி இருக்கும் எனவும், கட்டண நிர்ணயத்தில் விதிமீறல் இல்லை எனவும் தமிழக அரசு விளக்கமளித்தது.இருதரப்பு வாதங்கள் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், மின்சார ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றியே கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக அரசு தரப்பு அளித்த விளக்கத்தைஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். தனிப்பட்ட நபர்களுக்கு பிரச்னை இருந்தால் அரசை அணுகி தீர்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. ஊரடங்கால் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் ஜூலை 5 வரை மின்கட்டண மையங்கள் செயல்படாத நிலையில், அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.