கதைகள்சென்னை

இதோட 62 டயாலிசிஸ், எப்ப கொரோனா வேற..ஆனாலும் கைவிடல..அரசு மருத்துவர்களின் அசத்தல் சாதனை..!!

62 முறை டயாலிசிஸ் (dialysis) மேற்கொண்ட 18 வயது இளைஞருக்கு கொரோனா (corona virus) தொற்று ஏற்பட்டபோதிலும் புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் மகேஷ் வில்லியம்ஸ். 18 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது, அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த காரணத்தினால் இதுவரை 62 முறை டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார். ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த மகேஷ் வில்லியம்ஸால் டயாலிசிஸ் செய்ய பணம் இல்லாத காரணத்தினால் ஊர்மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் பணம் பெற்று வைத்தியம் செய்ய சுமார் ஐந்து லட்சம் வரை, தனியார் மருத்துவமனையில் செலவு செய்து மருத்துவம் பார்த்துள்ளார்.

இந்நிலையில், மகேஷ் வில்லியம்ஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு தங்களுடைய மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர். எனவே புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில், அவரை அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் கொடுத்த உத்வேகத்தின் காரணமாக, மிகுந்த மகிழ்ச்சியான நபராக மாறினார் மகேஷ் வில்லியம்ஸ். இதையடுத்து, அவருக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் பொருட்டு ராணியார் மருத்துவமனைக்கு பிரத்யேக டயாலிசிஸ் கருவி கொண்டு வரப்பட்டு டயலிசிஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸுக்கான சிறப்பு மருத்துவத்தையும் மருத்துவர்கள் கவனித்து வந்தனர்.

கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மகேஷ் வில்லியம்ஸ் தற்பொழுது தொற்று இல்லாத இளைஞராக மாறி வீடு திரும்பியுள்ளார். மிகுந்த சவாலான இந்த சூழ்நிலையில், வாலிபரின் உயிரை காப்பாற்ற புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், புதிய டயாலிசிஸ் மிஷினை வரவழைத்து அதன் மூலம் இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அவரது குடும்பத்தினரை நெகிழ வைத்துள்ளது.

பொதுவாக அரசு மருத்துவக்கல்லூரி இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை தான் முதலில் நினைக்கவில்லை என்றும், நோய் தொற்று ஏற்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு வரும் பொழுது தான் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு வந்த உணர்வே ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் செவிலியர்கள் தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும், அவர்களுடைய முயற்சியால் இன்று தான் கொரோனா வைரஸ் இல்லாத நபராக மாறி இருப்பதாகவும், மகேஷ் வில்லியம்ஸ் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் இவ்வாறு சிறப்பான சிகிச்சை அளிப்பது என்பது மிகுந்த சவாலானது என்றும், அதே நேரத்தில் ஆச்சரியமான விஷயம் என்றும், தன்னால் இதை நம்ப முடியவில்லை எனவும் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

சாவின் எல்லைக்குச் சென்ற எனக்கு மீண்டும் உயிரை மீட்டு கொடுத்த தமிழக அரசுக்கும், புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கும் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், ‘மகேஷ் வில்லியம்ஸ்க்கு 62 முறை தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் அவர்கள் இந்த இளைஞரை கைவிட்ட நிலையில் தான் தங்களிடம் சிகிச்சைக்காக வந்தார் என்று கூறினார். எனினும், உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து தற்போது உயிரை காப்பாற்றி உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளலாம்’ என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை சிறப்பு மையமாக துவக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி இருப்பதாகவும், பிறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பச்சிளம் குழந்தைக்கும் 84வயது முதியவர், 82 வயது பெண், 62 வயது ஆண் என எண்ணற்ற உயிர்களை மருத்துவமனை காப்பாற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தொற்று ஏற்பட்ட நபர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு செவிலியர் மூலமாக சிறந்த சேவையை வழங்கி வருவதால் இது சாத்தியமானது என்றும் தெரிவித்தார்.

வருங்காலத்தில், எத்தகைய சிக்கலில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதை சரி செய்து அவருடைய வாழ்வை மீட்டு கொடுப்பதில் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் முனைப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.