மருந்து தெளிக்காமலேயே வைரஸ்களை கொல்லும் “உலோகம்”!
மருந்து தெளிக்காமல், உலோக மேற்பரப்பின் அமைப்பை வைத்தே கிருமிகளை கொல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறது ஒரு இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு. ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து தொழில்நுட்ப நிலையத்தை சேர்ந்த பேராசிரியர் பிரசாத் யார்லகட்டாவின் தலைமையில் ஒரு குழு, சாதாரண அலுமினிய தகடை வைத்து இதை சாதித்துள்ளது. ‘சோடியம் ஹைட்ரோகுளோரைடு’ திரவத்தில் மூன்று மணி நேரம் ஒரு அலுமினிய தகட்டை ஊற வைத்தால், அந்த தகட்டின் மேற்பரப்பில் பல நுண்ணிய குழிகள் ஏற்பட்டு சொரசொரப்பாகி விடுகிறது.பிறகு, தகட்டின் மீது பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வைத்தால், அவை நுண் குழிகளின் இரு பக்கங்களிலும் ஈர்க்கப்படுவதால், இரண்டாக கிழிந்து இறந்துவிடுகின்றன. சில பூச்சிகளின் இறக்கைகளில் கிருமிகள் தொற்றாமல் இருக்க இயற்கை அமைத்துக்கொடுத்த இந்த உத்தியைத்தான் விஞ்ஞானிகள் அலுமினிய தகட்டில் செய்து பார்த்து, வெற்றி கண்டுள்ளனர்.மருத்துவமனை மேசைகள், கதவுகள், கைப்பிடிகள் இருக்கைகள் என்று சகலத்திற்கும் இதே போன்ற உலோக வகைகளை பயன்படுத்தினால், மருந்து தெளிக்காமலேயே வைரஸ்களை கொல்லலாம் என்று குவீன்ஸ்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.