மண்டையை பிளந்து ஆபரேஷன் செய்யும் போது, ஹாயாக போண்டா சமைத்த சூப்பர் பாட்டி!!
இத்தாலியில் 60 வயது பாட்டி ஒருவருக்கு, மண்டையை பிளந்து ஆபரேஷன் நடந்துக் கொண்டிருந்தபோது, ஹாயாக ஆலிவ் இலைகளை மடித்து இத்தாலி நாட்டு போண்டா ரக உணவை தயாரித்துக் கொண்டிருந்த செய்தி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இத்தாலியின் அன்கோனா நகரைச் சேர்ந்தவர் மேரி (60, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூளையில் திடீரென ரத்து உறைவு ஏற்பட்டு பெரும் பிரச்னைகளை சந்தித்தார்.
இதையடுத்து, அஜிண்டா ஆஸ்பெடாலி ருனிதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த நரம்பியல் நிபுணர்கள், உடனடியாக அவருக்கு மண்டையை பிளந்து ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு அவரது உறவினர்களும், பாட்டியும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் அவருக்கு ஆபரேஷன் நடந்தது. இது மிகச்சிக்கலான ஆபரேஷன். ஒரு சின்ன தவறு நேர்ந்தாலும், மேரியின் வலது புற உடல் பாகங்கள் அனைத்தும் செயலிழந்து போகும். இதனால் தங்களுடைய ஆபரேஷன் சரியாக நடக்கிறதா என்பதை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள ஒரு உபாயத்தை கையாள முடிவு செய்தனர்.
அதாவது ஆபரேஷன் நடந்துக் கொண்டிருக்கும்போது, பாட்டிக்க பிடித்தமான ஆலிவ் இலையில் போண்டா போன்ற ஒரு இத்தாலி உணவு வகையான ‘ஆலிவ் அஸ்கோலேன்’னை தயாரிக்க வைப்பது என்று முடிவு செய்தனர். இதன்படி பாட்டியின் மண்டை மட்டும் தெரியும்படி துணி போர்த்தப்பட்ட வலது புறத்தில் அவரை பார்த்துக் கொள்வதற்காக ஒரு திறப்பு மட்டும் விட்டு டாக்டர்கள் ஆபரேஷனை தொடங்கினர். 11 நரம்பியல் நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்தனர். ஆபரேஷன் நடந்த இரண்டரை மணி நேரமும் பாட்டில ஆலிவ் இலைகளை சுருட்டி உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அவருக்கு பின்னால் மண்டையை பிளந்து டாக்டர்கள் ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்தனர். மேரி பாட்டி இப்போது நலமாக இருப்பதாக ஆபரேஷனுக்கு தலைமை வகித்த டாக்டர் ராபர்ட்டோ டிரிக்னானி தெரிவித்துள்ளார். இதேபோல் ஏற்கனவே லண்டனில் 53 வயதான டேக்மர் டர்னர் என்ற நபருக்கு தலையில் ஆபரேஷன் நடந்தபோது, அவரது உடல்நரம்புகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அவருக்கு பிடித்தமான வேலையான வயலினை வாசிக்கும்படி டாக்டர்கள் கேட்டுக் கொண்டு, அந்த நேரத்தில் அவருக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து முடிக்கப்பட்டது.