நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுவருகிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மூன்றாம் கட்ட தளர்வுகள்:
இரவுநேரத்தில் தனிநபர்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் யோகா மையங்கள், ஜிம்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. இந்த மையங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
சமூக இடைவெளி மற்றும் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுதந்திரம் தின விழாக்கள் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே சில நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க சூழ்நிலையின் அடிப்படையில் மாநில அரசுகள் முடிவுசெய்யலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே பொதுமக்கள் செல்லவும், சரக்குகளை கொண்டுசெல்லவும் எந்தத் தடையும் இல்லை.
இதற்காக தனியாக அனுமதியோ, இ-பாஸோ தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், 65வயுக்கு மேற்பட்ட முதியோர், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவயதினர் மற்றும் கர்ப்பிணிகள் வீட்டிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடரும் கட்டுப்பாடுகள்:
மெட்ரோ ரயில்கள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் திரையரங்குகள், ஸ்விம்மிங் பூல், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும் அரசியல் கட்சி, விளையாட்டு, கலாச்சார கூட்டங்களுக்கான தடை தொடரும். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.