அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
ஸ்டாலின் மக்களை கூட்டி மக்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பே இதைப்போன்று மக்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் பெறப்பட்ட மனுக்கள் என்னவாயிற்று. மக்களை இதுபோன்று தொடர்ந்து அவர் ஏமாற்றி வருகிறார். தற்போது பெண்களை கூட்டி வாத்தியார் போன்று கூட்டம் நடத்தி வருகிறார். இதில் ஏதாவது பயனுள்ளது பேசி வருகிறாரா? இல்லை. அரசை பற்றியும், அரசு திட்டங்கள் பற்றியும் குறை கூறி வருகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குறித்து ஊழல் புகார் தெரிவித்து உள்ளார்.
இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். இதை தெளிவுபடுத்த வேண்டியது எங்களது பொறுப்பு. அவர் சொன்னது போன்ற டெண்டரே நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் எப்படி ஊழல் நடைபெறும். எனவே அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ன நினைத்தார்களோ அதை எனது தலைமையிலான அரசு சிறப்பாக செய்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை திறந்து வரலாறு படைத்துள்ளோம்.
மேலும் 92 மாணவர்கள் பல் மருத்துவமனையில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நான் அரசு பள்ளியில் படித்ததால் அரசு பள்ளி மாணவர்கள் படும் கஷ்டம் எனக்கு தெரியும்.இவ்வாறு அவர் பேசினார்.